கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. சென்ற சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து மகிந்தராஜபக்சே உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
இவ்வன்முறையில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். அத்துடன் 100-க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கிடையில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சமடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொது சொத்துக்கள் மற்றும் தனி நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு இலங்கை முப்படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக இலங்கை ராணுவ ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவித்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது எச்சூழலிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படாது என இலங்கை ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒருபோதும் ஈடுபடாது என ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்து உள்ளார்.