


ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேச அரசு மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. எனினும் இந்தியாவில் ஒமைக்ரான் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போது 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி பொது முடக்கம் உடனடியாக நேற்றைக்கு இரவே அமலுக்கும் வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை. எனினும் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் இந்தியாவில் ஒமைக்ரானால் அதிகம் பாதித்த மாநிலமாக உள்ளது. மகாராஷ்ட்ராவிலிருந்து மத்திய பிரதேசம் வருவோர் அதிகம் என்பதால், அவர்களால் தொற்று பரவல் அபாயம் உள்ளதாகக்கூறி, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
நாடெங்கும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் பகுதியளவு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே, ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று வெளியாகி கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாடெங்கும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

