

இதய தெய்வம், இதயக்கனி, புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், மக்கள் நடிகர் என தமிழ் நாட்டு மக்களால் மட்டுமல்ல வெளிநாட்டு மக்களாலும் தங்களது உயிருக்கும் மேலாக கொண்டாடிய ஒரு உச்ச நட்சத்திரம் என்றால் அது எம்.ஜி.ராமசந்திரன் தான். சுருக்கமாக எம்.ஜி.ஆர் இந்த மூன்றெழுத்து மந்திரத்தால் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் மாயாஜாலத்தால் கட்டிப்போட்டார் என்று கூறினால் அது மிகையாகது.
எம் ஜி ஆரின் அரசியல் பயணம் குறித்து கட்சியினர் பலர் அறிந்திருந்தாலும், எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்த ஒரு மிகப்பெரிய பங்கு சினிமாவிற்கு உண்டு. அந்த சினிமாவில் எம்.ஜி.ஆர் எனும் உச்ச நட்சத்திரம் குறித்து அறியாத சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
எம் ஜி ஆர் என்ற நட்சத்திரம் 1936ம் ஆண்டு 40 வயதில் சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்குகிறார்.ஆனால் 1947 ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்திற்கு பிறகே எம் ஜி ஆர் நட்சத்திர அந்தஸ்க்கு உயர்ந்தார்.
எம் ஜி ஆர் மொத்தம் 136 படங்களில் நடித்துள்ளார். இதில் நாடோடி மன்னன் ,அடிமை பெண், உலகம் சுற்றும் வாலிபன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
1952 ம் ஆண்டு திமுகவில் இணைந்த பிறகு தனது கருத்தையும் கட்சியின் கருத்தையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை எம் ஜி ஆர் தனது திரைப்படம் மூலம் செய்து காட்டினார்.
நாடோடி மன்னன் படத்தை மிகுந்த சிக்கல்களுக்கு நடுவே தயாரித்து இயக்கும் போது கூறிய வார்த்தை “இந்த படம் ஓடினால் நான் மன்னன், இல்லையென்றால் நான் நாடோடி” என்றார். எம்.ஜி.ஆர் சொல்லியது போல படம் பட்டித்தொட்டி எங்கும் வசூலை வாரி குவித்தது.
நாடோடி மன்னன் திரைப்படத்தில் புரட்சி இயக்கத்தை சேர்ந்த எம்ஜி ஆர் மக்களாட்சி குறித்து பேசிய வசனங்கள் அன்றைய காலத்தில் அரசியல் வேட்கைக்கு தீணிபோட்டது.
அரச படங்களில் நடித்து ஆண் ரசிகர்களை ஈர்த்த எம்.ஜி.ஆரால் பெண் ரசிகர்கள் இல்லை என்ற பேச்சு அடிபட்ட நிலையில் அவர் அடித்த குடும்ப திரைப்படங்கள், காதல் காட்சிகள், பாடல்கள் என்று நடித்த அத்தனை படங்களும் கிளாசிக் ஹிட் அடித்தன.
எம்.ஜி.ஆர் தனது ரசிகனுக்கு தான் சொல்ல நினைப்பதை படத்தின் பாடல்கள் மூலம் சொல்லுவார். அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிட உடமையடா என்ற பாடல் எம்.ஜி.ஆர் காரில் எப்போதும் ஒலிக்கும் அவரது விருப்ப பாடல்.
எம்.ஜி.ஆர் தனது ரசிகருக்கு நல்ல ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் தனது படத்தில் இருப்பதை தவிர்த்து விடுவார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார்.அதே போல மலைக்கள்ளனில் ‘ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.
அதே போல எம்.ஜி.ஆருக்கு நடனமாடுவது என்பது சற்று கடினம். அதனால் தனது கை அசைவுகள், உடல் மொழியினால் அந்த பாடலை வேறு மாதிரி மாற்றி விடுவார்.ஆனாலும் அதையும் மீறி எம்.ஜி.ஆர் ஆடி ஹிட் அடித்த பாடல்களும் உண்டு.
குறிப்பாக பெரிய இடத்து பெண் திரைப்படத்தில் அன்று வந்ததும் இதே நிலா பாடல் , கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பாடலிலும் எம்ஜிஆரின் நடனம் ரசிக்கும் படியாக இருக்கும்.
எம் ஜி ஆர் 16 படங்ககளில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். எம்ஜி ஆர் நடித்த கலர் படங்கள் 40 அதில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள் 35.
எம்ஜி ஆர் உடன் அதிக படங்களில் ஜெயலலிதா(28படங்கள்),சரோஜா தேவி (26படங்கள்) நடித்துள்ளனர்.
ஒருமுறை எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவிற்கும் ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் காரணமாக எங்கு கட்சியை விட்டு விலகி விடுவாரோ என்று எண்ணிய போது அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர் 1964ம் ஆண்டு வெளியான தெய்வத்தாய் படத்தில் பாடலின் மூலம் பதில் கூறினார்.
அந்த பாடல் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்,அது முடிந்த பின்னாலும் பேச்சுருக்கும், உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பேர் இருக்கும் கடமை அது கடமை என்று அண்ணாவை சமாதானப்படுத்தினார். அந்த மூன்றெழுத்துக்குள் அண்ணா ,திமுக, எம்.ஜி.ஆர் ஆகிய மூன்றும் அடங்கும் என்பதை கருணாநிதியின் நலன் விரும்பியாக இருந்தாலும் எம் ஜி ஆருக்கு என்று பாடலை அமைத்தார் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆர் முதல்வராகும் போது 15 படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார். அதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும் 1977ம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம் அண்ணா நீ என் தெய்வம். இந்த படத்தின் காட்சிகளை வைத்து அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து பாக்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் தான் அவசர போலீஸ் 100.
எம்.ஜி.ஆர் எனும் நடிகர் தான் மட்டும் வாழாமல் தன்னை சார்ந்த தயாரிப்பாளர் ,நடிகர்கள், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்று நினைத்து படங்களில் நடிப்பார்.
இந்த காலத்தில் தனது ரசிகர்களை ஓட்டுகளாக மாற்ற முயற்சி செய்து தோல்வியை சந்தித்த நிலையில் இதற்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர். எம் ஜி ஆர் கை அசைத்தாலே பல லட்சம் ஓட்டுகள் குவியும். மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை 1984 ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இல்லாமலேயே அமெரிக்காவில் இருந்து கொண்டே இங்கு ஆட்சியை பிடித்தார்.
எம்.ஜி.ஆர் படத்தினை ரிக்ஷா வண்டி, ஆட்டோ , மிதிவண்டி களில் ஒட்டிக்கொண்டு எம் ஜி ஆரை கடவுளாகவும் எம் ஜி ஆரின் வெறியர்களாக பக்தர்களாக இன்றளவும் பலர் இருகின்றனர். கிராம பகுதியில் சென்று எம் ஜி ஆர் இறந்து விட்டார் என்று கூறினால் அடிக்க வருவார்கள் காரணம் இன்றும் ரிக்ஷா காரனாக , உலகம் சுற்றும் வாலிபனாக , எங்க வீட்டுப்பிள்ளையாக , பட்டிக்காட்டு பொன்னையாவாக , நினைத்ததை முடிப்பவனாக, ஊருக்கு உழைப்பவனாக, மன்னாதி மன்னனாக எளிய மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
