• Sat. Apr 27th, 2024

வரும் ஞாயிறு (ஜன 23) முழு ஊடரங்கு!!

கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 23 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு கடந்த 5 ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த (ஜன ) 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் முதல் முழு ஊரடங்கு கடந்த 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16 ஆம் தேதி 2வது ஞாயிறு முழு ஊரடங்கு அமலானது. இந்த 2 முழு ஊரடங்கு நாட்களிலுமே அத்தியாவசிய பணிகளைச் செய்யவும் திருமணத்திற்குச் செல்லவும் மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. பொது போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதித்திருந்தது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஜனவரி 31 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23 ) அன்று முழு ஊரடங்கு விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைக்கும், உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும், அதேபோல் பால் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்யும் மின் வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வோர், அதற்கான அழைப்பிதழை காண்பித்து பயணிக்கலாம்.

மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்ட இரயில் நிலையங்கள் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *