• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிய நா.த.க தலைவர் சீமான்

Byவிஷா

Jun 28, 2024

“மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக சென்னையில் நடைபெற்று வரும் ’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
விஜய் செய்யும் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது..,
“கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.
‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப் பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என சீமான் கூறியுள்ளார்.