• Thu. May 2nd, 2024

நவராத்திரி உருவான கதை மற்றும் விஞ்ஞான உண்மைகள்..!

Byவிஷா

Oct 9, 2023

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.
சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.


பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள். இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.
அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரி எனப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதம் அமாவாசை திதி தொடங்கி தசமி திதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்களில் முதல் 3 நாட்கள் துர்காவையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் போற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதிகம். துர்க்கையின் 9 அவதாரங்களையும் ஒவ்வொரு நாளும் போற்றி பக்தியுடன் மனமுருகி பிரார்த்தனை செய்திட வேண்டும்.

இந்து மதத்தில் அனைத்து பண்டிகைகளும், விழாக்களும் அறிவியல் காரணங்களுடன் தொடர்புடையவை. நவராத்திரியும் அப்படியே. நவராத்திரி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வருகிறது. இந்த காலம் தான் இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் காலம் இது. பொதுவாகவே குளிர் காலம் உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும்,கொழுப்பின் கலவையையும் பாதிப்படைய செய்வதாக அறிவியல் விஞ்ஞானம் கூறுகிறது. அந்த வகையில் இந்த மாதங்களில் பகல் குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். இதனால் வடக்கு பகுதியில் குளிர் அதிகரிக்கும். இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்களுக்கு காரணமாகி விடுகின்றன. அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவே இந்த நவராத்திரி விரதங்கள்.
இந்து முறைப்படி தொடர்ந்து 9 நாட்களும் மக்கள் இடைவிடாத விரதத்தில் இருக்கிறார்கள். குளிர்காலத்தில் விரதம் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக கரையும். உடல் எடை குறைக்க போராடுபவர்கள் இந்த 9 நாள் விரதத்தை நிச்சயம் எடை குறைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.அத்துடன் விரதம் இருக்கும் காலகட்டத்தில் சாத்வீக உணவை உட்கொள்ள வேண்டும். தூய்மையான, இயற்கையான, உயிர்ப்பான, சுத்தமான, ஆற்றல் மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். பழங்கள், தயிர், கல் உப்பு, பருவகால காய்கறிகள் மற்றும் மல்லி மற்றும் கருப்பு மிளகு இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த வகை உணவுகள் மனதிற்கு அமைதியான உணர்வுகளை வழங்குகின்றன. அத்துடன் உடலில் சூட்டை அதிகப்படுத்தும் வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாவதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இந்த விரதம் கொழுப்பை குறைத்து குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. நவராத்திரியில் விரதம் இருந்து அம்பிகையின் அருள் பெறுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மீட்டெடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *