அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பரணம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி பிரபஞ்சத்தை காக்கும் பயணத்தை அரியலூர் மாவட்டம் கொள்ளிடக்கரையோரம் உள்ள திருமானூரிலிருந்து சனிக்கிழமை மிதிவண்டி பயணத்தை துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை மூன்று நாள் பயணமாக செல்கிறார்.

இவரது பயணத்தை அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநிலத்தலைவர் தங்க சண்முக சுந்தரம் வரலாறு மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கொள்ளிட நீராதார பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் துவங்கி வைத்தனர். இப்பயணத்தின் துவக்க நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பெண்கள் சமூக ஆர்வலர்கள் நீர்நிலை ஆர்வலர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்பயணம் குறித்து பரணம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில் பறவைகள் உண்ணும் பழவகை மரங்களை அதிகளவில் நட்டு பராமரிக்க வேண்டும். பறவைகள் தான் ஏறத்தாழ 80 சதவீத மரங்களை வனங்களில் உருவாக்கி உள்ளது. எனவே வனவிலங்குகள் பறவைகள் இன்னும் பல்வகை உயிரினங்களும் பயன்பெறும் வகையில் மண்ணுக்கேற்ற மரங்களான தேத்தாங்கொட்டை கொடம்புளி இலுப்பை நாவல் வேங்கை கொடுக்காப்புளி ஆலமரம் அரசமரம் உள்ளிட்ட பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு உதவும் வகையிலான மரங்களையும் உயிர்ச்சூழலை காக்கும் கிளுவை கள்ளி செடிகள் உள்ளிட்ட உயிர்வேலிகளை அமைப்பதன் மூலம் குள்ள நரிகளும் மயிலும் முயலும் பாம்பும் சூழலுக்கேற்றவாறு உயிர்ச்சூழல் உணவுச்சங்கிலி அறுந்து போகாமல் தக்க வைக்க உதவும் என்பதனை எனது பயணத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் அனைவரிடமும் வலியுறுத்துவதே நோக்கம் என்றார்.

மேலும் இரசாயன வேளாண்மையிலிருந்து விவசாயிகள் வெளியேறி இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க இயற்கை வளம் குன்றாமல் இயற்கை சூழல் மேம்படும் பிரபஞ்சம் முழுவதும் நீர் நெருப்பு எனும் ஒளி ஆகாயம் எனும் அண்டவெளி நிலம் எனும் பூமி காற்றும் மாசுபடாமல் இருக்கும் வகையில் பிரபஞ்சத்தை காக்கும் பயணமாக இருக்கும் என்றார்.







; ?>)
; ?>)
; ?>)