தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகங்களும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என தேசிய புலிகள் காப்பக ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தேசிய புலிகள் காப்பக ஆணையம் நாட்டில் உள்ள 51 புலிகள் காப்பகங்களையும் மதிப்பீடு செய்து தர வரிசை பட்டியல் வெளியிடுவதோடு சிறப்பு, மிகச் சிறப்பு, உயர் சிறப்பு என வகைப்படுத்தி பாராட்டுகிறது.
அதன்படி 2022ம் ஆண்டுக்கான மதிப்பீட்டிற்கு பிறகு தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகம் 5ம் இடத்தையும் முதுமலை புலிகள் காப்பகம் 8ம் இடத்தையும் பிடித்துள்ளது.
இவை இரண்டும் மிகச் சிறப்பில் இருந்து உயர் சிறப்பு தரத்திற்கு உயர்ந்துள்ளனர். சத்தியமங்கலம், களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகங்கள் மிகச் சிறப்பு தரத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளன. முதன்முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சிறப்பு தகுதியை பெற்றுள்ளது. நாடு முழுவதும் உயர் சிறப்பு தகுதியைப் பெற்றுள்ள 12 புலிகள் காப்பகங்களில் 2 காப்பகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.