• Fri. Mar 29th, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை படைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனே நகரில் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வு பெற்ற சுமார் 80 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். ஊனத்தின் அடிப்படையில் போட்டிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன.

அதில் 100, 200, 400, 800, 1,500, 5000 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்று 11 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களை பெற்றனர். இதன் மூலம் தமிழக அணி ஒட்டு மொத்த அளவில் 5-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த மனோஜ், கோவையை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை அனைவரும் பாராட்டினார்கள். போட்டியில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கும் தங்கும் விடுதி, உணவு, ரெயில் டிக்கெட், உள்ளூர் போக்குவரத்து அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் தலைவர் சந்திரசேகர், செயலாளர் கிருபாகராஜா, பொருளாளர் விஜய் சாரதி ஆகியோர் செய்திருந்தனர். அணியின் பயிற்சியாளராக மதுரை ரஞ்சித்குமார், அணி மேலாளராக விஜய் சாரதி ஆகியோர் சேர்ந்து தமிழக அணியை வழிநடத்தி இந்த சிறப்பான வெற்றியை தேடி தந்ததாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *