

பூமியைப் போன்று உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்திற்கு TOI -715b என்று பெயரிடப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, இந்தக் கிரகம், பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்டதாகும். சுற்றுவட்டப் பாதையில் தன் தாய் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த கிரகம் 19 நாட்களிலேயே தனது முழு சுற்றுவட்டப் பாதையை சுற்றி வருகிறது. இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 19 நாட்களே ஆகும். இதன் மேற்பரப்பில் திரவ நீருக்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. திரவ நீர் இருப்பது உயிரினங்கள் வாழ உகந்த ஒன்றாக உள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சூப்பர்-எர்த்’ ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும், அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வானியல் அளவுகோலின்படி, ஒரளவுக்கு பூமிக்கு அருகிலேயே உள்ளது என்று சொல்லலாம் எனவும் நாசா கூறியுள்ளது.

