



நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் இயங்கி வரும் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருக்கும்.
நீதித்துறை பாடத்திற்கு, நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்வையிட அப்பள்ளி மாணவ மாணவிகள் நாகை மாவட்ட முதன்மை நீதிபதி கந்தக்குமார் அவர்களுக்கு கடிதம் ஒன்றிய எழுதி இருந்தனர். அந்தக் கடிதத்தில் நாங்கள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்காடும் முறை, நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்க்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.


மாணவ மாணவிகளின் கடிதத்திற்கு உடனடியாக பதில் அளித்த மாவட்ட முதன்மை நீதிபதி இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்திற்கு வருகைத் தர அனுமதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து ஆசிரியர்களுடன் நாகை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த 23 மாணவ மாணவிகள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டனர். உரிமையியல் மாவட்ட நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் நடந்து வந்த வழக்கு ஒன்றை நேரில் பார்த்த மாணவ மாணவிகள், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களிடம் அவர்களுடைய சந்தேகத்தை கேட்டு அறிந்துகொண்டனர்.

நாங்கள் எழுதிய கடிதத்திற்கு உடனடியாக பதில் அளித்து அனுமதி அளித்த நீதிபதிக்கு நன்றி தெரிவித்த மாணவ மாணவிகள், சினிமாவில் பார்ப்பது போல் நீதிமன்றங்கள் இல்லை என்றும் நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்கள் தலைவணங்கி மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்து தங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொண்டதாகவும் கூறினார்கள். திடீரென பள்ளி மாணவர்கள் வருகை தந்ததை நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் பொதுமக்கள் என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து அவர்களை பாராட்டினார்கள்.

