நாகலாந்தில், அமலில் உள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை(ஏஎப்எஸ்பிஏ) மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.1958 முதல், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது.
சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரை வாரன்ட் இன்றி கைது செய்யலாம். அனுமதியின்றி சோதனை செய்யலாம். துப்பாக்கிச் சூடு நடத்தலாம் போன்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது.சமீபத்தில் மான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் எனக்கருதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 14 கிராமவாசிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அம்மாநிலத்தில் போராட்டம் நடந்தது. இதனையடுத்து, இந்த சட்டத்தை திரும்ப பெறுவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 45 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும் எனவும், அதன் அடிப்படையில் சட்டத்தை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த சட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இன்று (டிச.,30) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.