

மீண்டும் உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியை பாஜக குடியரசு தலைவராக்குமா? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “குடியரசு தலைவராவது எனது நோக்கமல்ல; உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி , “இனி உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் இல்லை. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் மீது முஸ்லிம்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். இதனால், அகிலேஷ் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் சூழல்களும் வரலாம். எனது கனவு. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அமர்வது அல்ல. உ.பி.யின் முதல்வராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் அமர்ந்து மக்களுக்குப் பணி செய்வதே ஆகும். ஆனால், எம் மீது சமாஜ்வாதி கட்சியினர் ஊகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

