சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்21 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடந்தது. கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாகும்.

இக்கோவிலில் கடந்த 2005 ஆம் ஆண்டு திருவிழா நடந்தது.21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த வாரம் திருவிழா கொடியேற்று விழா நடைபெற்றது. இதிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்றைய முன் தினம் மாலை அம்மன் சிலையை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு முன்பு வைத்து கும்மி அடித்து பாடி ஆடினர். அன்றிரவு மாவிளக்கு எடுத்து அம்மனை வேண்டி தரிசனம் செய்தனர். இரவு வள்ளி திருமண நாடகம் நடந்தது. நேற்று மதியம் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை அக்கினி சட்டி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இரவு கிராம தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடந்ததால் கிராம மக்கள் உறவினர்கள் கிராமத்தில் வந்து குவிந்தனர். இளைஞர்கள், இளம் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.



