• Thu. Oct 10th, 2024

கொலை – விமர்சனம்

Byதன பாலன்

Jul 22, 2023

“Who is the killer? என்ற கான்செப்ட் தான் கொலை

பேரழகே உருவான பிரபல மாடல் அழகி மீனாட்சி. அவரது குரலில் இருந்து தான் கதை துவங்குகிறது. அந்தக் குரல் சொல்லும் வசனம், “நான் எவ்வளவோ சாதிக்கணும்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என்னை கொன்னுட்டாங்க” இந்த வசனம் வந்த நொடிமுதல் நமக்குள் பரபரப்பு பற்றுகிறது. இந்தக் கொலைக்கான காரணி என்ன? செய்தவர் யார்? என்ற விசாரணையை ரித்திகா சிங் துவங்குகிறார். அவருக்கு உதவியாக சீனியரான விஜய் ஆண்டனி வருகிறார். விசாரணையின் முடிவு என்ன? என்பதே மீதிக்கதையாக விரிகிறது

விஜய் ஆண்டனி இதுவரை நடித்த படங்களிலே அதிக ஈடுபாட்டோடு அவர் நடித்த படமாக இதைச் சொல்லலாம். சின்னச் சின்ன மேனரிசங்களிலும் கவனிக்க வைக்கிறார். மனைவி, மகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவரது நடிப்பில் புதிய பரிமாணம் வெளிப்பட்டுள்ளது. லைலாவாக வரும் மீனாட்சி நிஜமான மாடல் அழகி என்பதால் அவரது நடிப்பு படத்தில் ப்ளீச் என மின்னுகிறது. அழகு, நடை, உடை, சிரிப்பு, அழுகை என அத்தனையிலும் நேர்த்தி. அவரது கேரக்டர் வார்ப்பு அட்சரச் சுத்தம். ரித்திகா சிங் தனக்கு வழங்கிய வேலையை வளவள இன்றி செய்து கொடுத்துள்ளார். சின்ன கேரக்டர் என்றாலும் ஜான் விஜய் சரியாகச் செய்துள்ளார். மேலும் இரு இளம் வயது கேரக்டர் படத்தில் வருகிறது. அவர்களின் கேரக்டர்களை ரிவில் செய்தால் அது கதையை ரிவில் செய்வதாக மாறிவிடும். So avoided it. ராதிகா உள்பட இன்னும் ஆங்காங்கே வரும் சில கேரக்டர்களும் உயிர்ப்போடே நடித்துள்ளனர்

படத்தின் பாதி இசையை எம்.எஸ். விஸ்வநாதனே ஆக்கிரமித்துள்ளார். நிறைய இடங்களில் அவரின் இசை தான். குறிப்பாக அவரது இசையில் சிவாஜி கணேசன் நடித்த புதியபறவைப் படத்தில் இடம்பெற்ற, “பார்த்த ஞாபகம் இல்லையோ?” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாட்டு ஒன்றே படத்தை பெரும் பாசிட்டிவாக மாற்றியுள்ளது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு உலகத்தரத்தில் அமைந்துள்ளது. நைட் ஷாட்கள் எல்லாம் அல்டிமேட் ரகம். மிக வித்தியாசமான லைட்டிங் அமைப்புகளும் அமர்க்களம். சில இடங்களில், “the mood for love” படத்தின் மேக்கிங்-ஐ இப்படம் நினைவூட்டியது

கொலை செய்யும் மனிதர்களுக்குள் உள்ள உளவியல் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் நிறைய வந்திருந்தாலும் இந்தப்படத்தில் நாம் யோசித்திராத ஒரு பிரச்சனையை சொல்கிறார் இயக்குநர் பாலாஜி கே. குமார். அந்தப் பிரச்சனையை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பதை விட, கொலை நடுங்கும் விதமாக படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வடிவத்தை எழுத முடியுமா? என்ற பதற்றமும் ஏற்பட்டது. மெயின் கதைக்கும் விஜய் ஆண்டனி கதைக்கும் ஒரு சின்ன கனெக்டிங் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. கதை சொல்லல் முறையில் கையாண்டிருக்கும் திரைமொழி படம் மீதான மரியாதையை உயர்த்தியது என்றே சொல்லலாம். படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகனுக்கு ஒரு நல்ல அனுபவம்& வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என படக்குழு மொத்தமும் பேய் உழைப்பு உழைத்திருக்கிறார்கள். ஒரு ஷாட் ட்ரான்சிசனில் கூட மெனக்கெடல்!! மேலும் படத்தில் நிறைய வாவ் மொமெண்ட்ஸும் இருக்கிறது. முன்பாதியில் படம் தரும் நல்ல விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ்க்காகவே கொலையை எந்த தயக்கமும் இன்றி பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *