துண்டு கதையை வைத்து என்டு வரை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா
தமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் பேயப்பட்டி என்றொரு கிராமம். படத்தின் துவக்கத்தில் அந்த ஊரில் ஒரு கொலை விழுகிறது. கொலையைச் செய்தவர்கள் உடனே பிடிபட கொலையுண்டவரின் நகையை எடுத்தது யார்? என போலீஸ் விசாரிக்கிறது. “வழியில போற மாரியாத்தா என்மேல வந்து ஏறாத்தா” என்ற கதையாக வான்டடாக வந்து சிக்குகிறார் பிரேம்ஜி. நகைக்கும் கொலைக்கும் என்ன தீர்வு என்பதே க்ளைமாக்ஸ்
படத்தின் முதல் பலம் கதை மாந்தர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பு. ப்ரேம்ஜி கூட இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். அவரை அதிகமாக ‘நடிக்க’ விடாமல் சாமர்த்தியமாக யூஸ் பண்ணியுள்ளார் இயக்குநர். கோபாலனாக வரும் ஏட்டய்யா, ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு இன்ஸ்பெக்டர், மற்றொரு அதிகாரியாக வரும் முத்துப்பாண்டி ஒரு பெண்போலீஸ், போலீஸ் இன்பாமர் மொசக்குட்டி, ஸ்டேசன் பக்கத்தில் குடியிருக்கும் ஒரு பாட்டி, நீதிபதியாக வரும் கு.ஞானசம்பந்தம் என படத்தில் தோன்றிய அனைவருமே பேயப்பட்டி, சங்குப்பட்டி மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
கதையின் போக்கை திசை திருப்பாமல் அதன் இயல்பிலே சென்று நம்மை கவர்கிறது படத்தின் பின்னணி இசை. ஒரு போலீஸ்காரன் பாடலும் இன்ட்ரெஸ்டிங். படத்தின் ஒளிப்பதிவாளர் மிகச்சிறப்பாக படம் பிடித்துள்ளார். கதையின் களத்தை இவ்வளவு எதார்த்தமாக காட்ட முடியுமா? என ஆச்சர்யப்படுத்துகிறார்
படத்தின் துவக்கத்தில் இருந்து இடைவேளை வரை படம் சற்று தேக்கத்தோடு பயணிக்கிறது. ஆங்காங்கே மட்டுமே சிரிக்க முடிகிறது. பின்பாதியில் அப்படியே டேக் ஆப் ஆகி பட்டயக்கிளப்புகிறது படம். ஒவ்வொரு காட்சியிலும் நச் நச் என சிரிப்பு வெடி வைத்துள்ளனர். ஆங்காங்கே பொலிட்டிகல் கலந்த சர்க்காசமும் இருக்கிறது. ஒரு இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை பதம் பார்த்துள்ளார் இயக்குநர். ஏன் சார்?
இந்தப்படத்தின் தன்மை இதுதான் என்பதை முதலிலே உணர்த்திவிடுவதால் படத்தோடு இயல்பாக நம்மால் ஒன்றிவிட முடிகிறது. படத்தின் ட்விஸ்ட் இதுதான் என யூகிக்க முடிந்தாலும் படத்தை கலகலப்பாகவே கொண்டு போய் சாதித்துள்ளார் இயக்குநர். இந்த வார இறுதிக்கு watchable கேட்டகிரியில் வந்துள்ளது சத்தியசோதனை.