• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு
பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது

சென்னை புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு பகுதிகள் வெள்ளக்காடானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, முகலிவாக்கம் உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே அந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அந்த பகுதிகள் மேலும் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம், 156-வது வார்டுக்கு உட்பட்ட முகலிவாக்கம் திருவள்ளுவர் நகர், நடராஜன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதையடுத்து பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகுகள், விசை படகுகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தையுடன் சிக்கி தவித்த பெண், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என மழை வெள்ளத்துக்கு இடையே சிக்கி தவித்தவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறிவினர்கள் வீடுகளுக்கு அடைக்கலம் தேடி சென்றனர். மேலும் சிலர் அங்குள்ள மாடி வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
போரூர் ஏரியில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அங்கிருந்து வெளியேற வழி இல்லாததால் குடியிருப்பு முழுவதும் மழை நீர் தேங்கி வெள்ளக்கடாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் உள்ள சுவரை உடைத்தால் தண்ணீர் போகும் என கருதி போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அந்த சுவரை உடைக்க முயன்றனர். இதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் எதிர்ப்பு
தெரிவித்ததால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் தண்ணீர், பிஸ்கட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்று வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். தேங்கி நிற்கும் மழைநீரை விரைந்து அகற்றுவதற்கான பணிகளில் அதிகாரிகளை தீவிரப்படுத்தினர்.
முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம் பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். சேறும், சகதியுமாக மாறிய சாலையில் நடந்து சென்று மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதேபோல் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கடந்த 2 நாட்களாக மழைநீர் சூழ்ந்து உள்ளதால் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கி உள்ளனர். அந்த பகுதிகள் வெள்ளக்காட்டாக மாறியது. இதனால் குன்றத்தூர் குமணன்சாவடி சாலை ஓரங்களில் இருந்த கால்வாய்கள் உடைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மழை நீரால் பாதிக்கப்பட்டவர்களை பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் மற்றும் விசை படகுகள் மூலம் மீட்டனர். ஆனால் முகாம்கள் ஏதும் இல்லாததால் பெரும்பாலான மக்கள், வீடுகளை விட்டு வெளியே வர மறுத்துவிட்டனர்.
முகலிவாக்கம் வெள்ளக்காடாக மாறியது ஏன்?
ஒவ்வொரு மழை காலத்தின்போது சென்னை மற்றும் புறநகர் பகுதியான முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில்தான் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் முகலிவாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:- போரூர் ஏரியில் உபரிநீர் செல்வதற்காக ரூ.120 கோடியில் கால்வாய் மற்றும் மதகு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் குறைந்த அளவு தண்ணீரே செல்ல வழி உள்ளது. ஆனால் மழையால் ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வந்ததால் முகலிவாக்கம் பகுதிக்குள் உபரிநீர் திரும்பியதால் குடியிருப்புகள் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அந்த பணிகள் முடிந்து விட்டால் இந்த பகுதியில் எந்த பாதிப்பும் வராது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் சிக்கி தவித்தவர்கள் படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.