கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகக் கூறி, அவரைக் கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை ஜோதிமணி துவங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர்,
“நான் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6800 கிராமங்களில் 6300 கிராமங்களுக்கு போய் மக்களை சந்தித்திருக்கிறேன். உதவி கேட்டு மனு கொடுத்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை கண்டு அதிர்ந்துபோனேன். தேவைஇருக்கிறது என்று தெரியாமலா இந்த திட்டத்தை கேட்டு வாங்கியிருப்பேன்?” என்று தமிழக அரசாணையில் புகைப்படத்தையும் இணைத்து கோவமாக பதிவு செய்துள்ளார்.
மற்றொரு பதிவில் ‘ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த மறுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இப்படியொரு பதில் கடிதம் கொடுக்கிறார்?’ என்றும், ஒன்றிய அரசின் திட்டமானாலும்,தமிழக அரசின் திட்டமானாலும் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவதுதான். கரூருக்கு ஒன்றிய அரசின் திட்டம் இப்பொழுது தேவையில்லை என்று எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வந்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் போராட்டத்தில் எடுபட்டு வருவதால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.