• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் நிறைவேற்றம்

Byகாயத்ரி

Dec 9, 2021

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் உடன் சென்ற 13 பேர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார். இதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மவுன அஞ்சலி, பின்னர் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முப்படைகளின் தலைமை தளபதியாக முதன்முறையாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத், அவருடைய மனைவி உயிரிழந்துள்ளனர். இவர்களை தவிர்த்து மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் வருண் சிங் என்ற கேப்டன் மட்டும் தான் உயிர் பிழைத்துள்ளார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிபின் ராவத் மற்றும் அவருடன் பாதுகாப்பிற்காக சென்ற அதிகாரிகள் மற்றும் சூலூர் விமான படையில் இருந்து சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்வு என்பது நடந்து வருகிறது. ராணுவ பயிற்சி மையத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும் முதல் அலுவலாக இந்த பணி நடைபெற்றது. மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நடந்த விபத்து குறித்த விவரங்களை அளித்தார். பின்னர் மிகவும் துக்கத்துடன் தான் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததாக தெரிவித்து கொள்வதாக மக்களவையில் பேசினார்.

தளபதி ராவத் குடும்பத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்து கொண்டு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்படும், அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மக்களவையில் தற்போது சபாநாயகர் ஓம் பிர்லா தனது இரங்கலை தெரிவித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும் துணை தலைவர் ஹரிவஞ் துக்க தகவலை அவைக்கு தெரிவித்தார். பின்னர் அவையின் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். அதேபோலவே தற்போது மக்களவையிலும் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.