• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அன்னை தெரசா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1910)…

ByKalamegam Viswanathan

Aug 26, 2023

அன்னை தெரேசா (Mother Teresa) ஆகஸ்ட் 26, 1910ல் மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும். சிறுவயது முதல் ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்ட இவர், தனது 18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளின் பால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, டுப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் ஆன்மீகக் கற்கையைத் தொடருமுகமாக அயர்லாந்து சென்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.

அன்னை தெரசா 1931-1948 ஆண்டுவரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப் பயிற்சியைப் பெற்றார். 1949 இல் மோதிஜில் என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்குகின்றார். 1950 அக்டோபர் 7ல் அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஒஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தொடங்கப்பட்டது. 1965ல் இந்த அமைப்பு சர்வதேச அளவில் வியாபகம் பெற்றது. முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

சேரிவாழ் ஏழை மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த தொண்டுகள் அளப்பரியன. “ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர். தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், எளிய வாழ்க்கை நடத்தியவர்.

1962 ஆம் ஆண்டு பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரின் இடையுறாத சமூகத்தொண்டை கௌரவிக்குமுகமாக 1980ல் இந்தியாவின் அதிஉயர் விருதான பாரத ரத்னா விருதும், 1983 இல் பிரிட்டிஷ் மகாராணி 2ஆம் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன. 1997 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார். சுமார் 45 வருடகாலம் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா செப்டம்பர் 05, 1997ல் தனது 87வது அகவையில் கொல்கத்தாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார். அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுத் தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் மறுக்க முடியாது.

இந்த நாளில், அன்னை தெரசாவின் அமுத மொழிகளை ஏற்று நடப்போம்.

  • பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு அருகே நீங்கள் செல்வீர்கள். அதேசமயம், மக்களுக்குச் சேவை செய்து பாருங்கள். கடவுளே உங்களுக்கு அருகிலேயே வருவார்.
  • மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தால், ஒருபோதும் உங்களுக்கு அன்பு செய்ய வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.
  • இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள்.
  • இறப்பதற்காகத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்துடன் வாழ்வோம்.
  • அன்பு என்பது சொற்களைக் கொண்டு வாழ்வதாக நினைக்கிறோம். ஆனால் அன்பை, சொற்களால் விளக்க முடியாது. செயல்களால் உணர்த்துவதே அன்பு.
  • உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்களை நேசியுங்கள். உங்கள் மீது கோபம் கொண்டவர்களை இன்னும் அதிகமாவே நேசியுங்கள்.
  • மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
  • கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை.
  • கொடுப்பது சிறியதுதானே என்று தயங்காதீர்கள். ஆனால் பெறுபவருக்கு அது மிகப்பெரியது. அதற்காக எடுப்பது சிறிது என்று திருடாதீர்கள். அது இழந்தவருக்கு மிகப்பெரியது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  • உனக்காக வாழ்கிறேன் என்று சொல்லுவது நமக்கு இன்பம். உன்னால்தான் வாழ்கிறேன் என்று நம்மைப் பார்த்துச் சொல்லவைக்கும்படி வாழ்வது பேரின்பம்.
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.
    Source By: Wikipedia
    தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.