கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தாய் யானையும் அதன் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியான சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
இன்று காலை சுமார் 11:40 மணி அளவில், தமிழக எல்லையில் இருந்து வெறும் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநில எல்லைக்கு உட்பட்ட வாளையார் – சாவடிப்பாரா புதுப்பதி ரயில்வே தண்டவாளப் பகுதியில் காட்டு யானைகள் கடக்க முயன்று உள்ளன.

அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த ‘மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ்’ ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தாய் யானை மற்றும் குட்டி யானை மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு யானைகளும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

சம்பவம் கேரளா எல்லைக்குள் நடந்து உள்ள போதிலும், தமிழக எல்லையை ஒட்டிய பகுதி என்பதால் வாளையார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம் குறித்து வாளையார் வனத்துறையினர் மற்றும் கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய ரயில்வே தண்டவாளங்களில் ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்து உள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





