• Fri. Apr 26th, 2024

கொசு வலை வழங்கும் திட்டம்
அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மழைக்காலங்களில் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்க பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கொசு ஒழிப்புப்பணிகளில் 3,278 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே மழைநீர் தேங்கும் இடங்களில் தேவையற்ற பொருட்கள் அகற்றப்படுகின்றன. மண்டலம் 1 முதல் 15 வரை அட்டவணை தயாரிக்கப்பட்டு பணியாளர்கள், இயந்திரங்கள் மூலம் கொசு மருந்து தெளிப்பு உள்ளிட்ட கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க நீர்வழித்தடங்களின் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடும்பத்துக்கு ஒன்று வீதம் 2 லட்சத்து 60,000 கொசுவலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட உள்ள கொசு ஒழிப்புப்பணிகளையும் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்எல்ஏ, துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *