• Tue. Apr 16th, 2024

இனி முழு ஊரடங்கிலும் அம்மா உணவகம் செயல்படும்

Byகாயத்ரி

Jan 7, 2022

சென்னையில் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் உணவுகள் இங்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள் இதனை நம்பி உள்ளனர். ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 200 வார்டுகளில் இயங்குகின்றன. இது தவிர அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் உதவியாளர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின் போது அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட்டன. கொரோனா முதல் அலை தாக்கத்தின்போது இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன.பொது முடக்கத்தின் போது அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் விளங்கின. தினமும் 4 லட்சம் பேர் உணவருந்தினார்கள். 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டதால் தெருவோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.

2-வது அலையின் போது கடந்த ஆண்டும் அம்மா உணவகங்கள் கை கொடுத்தன. இலவசமாக சில நாட்கள் உணவுகள் வழங்கப்பட்டன.இந்த நிலையில் தற்போது 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
அன்றைய தினம் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அதே நேரத்தில் பார்சல் வினியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அம்மா உணவகங்கள் அனைத்தும் அன்று முழு அளவில் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாலையோரங்களில் இயங்கும் சிறிய தள்ளுவண்டி கடைகள் மூடப்படுவதால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படாத வகையில் அம்மா உணவகங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அம்மா உணவங்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட அன்று கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் உணவு தட்டுப்பாடு வராமல் தேவையான அளவு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி ஆகியவை தயாரிக்க உணவு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 1.75 லட்சம் பேர் சாப்பிட்டு வருகிறார்கள். ஊரடங்கின் போது இந்த எண்ணிக்கை மேலும் 2 லட்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *