கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக சின்ன வாய்க்கால் மற்றும் வீரப்பா நாயக்கன் குளத்தில் கலக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு மாலை திடீரென காற்றுடன் கனத்த மழை பெய்தது. இதனால் சாக்கடை கால்வாய்கள் ஓடைகளில் கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் 26 , 27 மற்றும் 29 வது வார்டு பகுதிகளான பார்க் ரோடு ,நெல்லு குத்தி புளியமரம் தெரு,போர்டு ஸ்கூல் தெருக்களில் உள்ள ஓடைகளில் மழைநீருடன் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள நகராட்சி மெயின் ஆரம்பப் பள்ளியை ஒட்டி செல்லும் ஓடையில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் தண்ணீர் செல்லமுடியாமல் கழிவு நீருடன் மழை நீர் பள்ளி வளாகத்தில் சூழ்ந்தது.
பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து கிழக்கு பகுதி வழியாக வெளியேறி அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கி நின்றது. இந்த தண்ணீரிரால் ராமகிருஷ்ணன், சுந்தரி, சக்திபாலா, நல்லுபிள்ளை, ரத்தினசபாபதி ஆகியோர்களது வீட்டின் சுவர்கள் அடியோடு சரிந்து விழுந்தது. கட்டிட சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அறிந்த கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் மற்றும் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது அங்கிருந்த உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் ,உதவி பொறியாளர் சந்தோஷ்குமாரிடம் கட்டிட சேதமடைந்து குறித்தும், மழைநீர் பள்ளி வளாகத்தில் சூழ்ந்தது குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவிகளை காலதாமதமின்றி வழங்கவேண்டும், பள்ளி சத்துணவு மையத்தில் சேதமடைந்த உணவு பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் வழங்க தாசில்தாரரிடம் எம்.எல்.ஏ உத்தரவிட்டார்.

இதேபோல் பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த கழவுநீரை அகற்றி சுத்தம் செய்யுமாறு நகராட்சி சுகாதார அலுவலருக்கு நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இதில் கம்பம் திமுக நகரச்செயலாளர்கள் வீரபாண்டியன்(வடக்கு), பால்பாண்டியராஜா(தெற்கு),கவுன்சிலர்கள் செந்தில்குமார், விருமாண்டி, அபிராமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.