• Tue. Apr 16th, 2024

எம்.கே.டி.பிறந்த தினம்; நினைவிடத்தில் மரியாதை

கம்பீர குரல் வளத்திற்கு சொந்தக்காரர் மட்டுமின்றி பாட்டு மற்றும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரையை பதித்த பெருமை, எம்.கே.தியாகராஜ பாகவதரையே சாரும். இவரது 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னராக திகழ்ந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் ரசிகர்களால் எம்.கே.டி.என செல்லமாக அழைக்கப்பட்டார். கம்பீர குரல் வளத்தில் மட்டுமின்றி அபார நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பவளக்கொடி, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக் குமார், அமரகவி உள்ளிட்ட 14 படங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்ற பெருமை எம்.கே.தியாகராஜ பாகவதரையே சாரும். மேலும் இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ என்ற படம் மட்டும் மூன்று தீபாவளியை தாண்டி ஓடி வசூல் சாதனை படைத்ததை, அவரது ரசிகர்கள் இன்றளவும் மறந்திருக்க முடியாது. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருந்தனர். அவர் அணியும் பட்டு ஜிப்பா, அவருக்கே உரித்தான சிகை அலங்காரம் ஆண்களை மட்டுமின்றி பெண்களையும் வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக அந்தக் காலத்தில் வாழ்ந்த பல இளைஞர்கள் ‘பாகவதர் ஸ்டைலில்’ முடி வைத்திருந்தனர். இவர் செல்லும் இடங்களில் எம்.கே.டி.யை ஒரு முறையாவது எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் அந்த இடத்திற்கு முன்கூட்டியே பொதுமக்கள் சென்று நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்த காலமும் உண்டு. இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற, எம்.கே.தியாகராஜ பாகவதரின் 113வது பிறந்தாள் விழா, இன்று (மார்ச் 1) உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்களால் கொண்டப்பட்டன. இதில் முத்தாய்பாக திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் அமைந்துள்ள எம்.கே.டி., யின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் விஸ்வகர்மா மகாஜன சபை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விஸ்வகர்மா மகாஜன சபை தலைவர் குமரப்பன் ஆச்சாரி, செயலாளர் சுப்பன்னா ஆச்சாரி, பொருளாளர் வெள்ளையன் ஆச்சாரி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் கந்தசாமி, மருதமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *