• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ByP.Kavitha Kumar

Mar 4, 2025

பாஜகவின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பதுதான் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர் மடல்

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அவர் இன்று வெளியிட்ட கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தொடர் மடலின் ஏழாவது பகுதி. 14 வயது முதல் இருவண்ணக் கொடியை உயர்த்திப் பிடித்து, 72 வயதிலும் கட்சியின் தலைவராக அல்லாமல், தொண்டனாகக் கருதி உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஊக்கமளிப்பது உடன்பிறப்புகளான உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகள்தான்.

என் பிறந்த நாளையொட்டி சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று வாழ்த்தினார்கள். அவர்களின் வாழ்த்துகள் தனிப்பட்ட எனக்கானவையல்ல. நம் இயக்கத்திற்கான வாழ்த்துகள். அவற்றை வாழ்த்து என்று சொல்வதைவிட, நம்பிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொகுதி குறைப்பு

மத்திய அரசால் இன்றைக்கு நாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விரிவாக விளக்கி, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைத் தடுத்திடவும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைத்திடவும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், பாஜக ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் சுட்டிக்காட்டி, இவற்றை எதிர்கொள்ளும் வலிமை கொண்ட இயக்கமான திமுக தலைவரான என் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

அந்த நம்பிக்கை என்பது, என்மீதானதல்ல, உங்களையும் உங்களில் ஒருவனான என்னையும் ஒருங்கிணைத்து வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை.
அதனால்தான் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், இனம் – மொழி காப்பதற்கும், மாநில உரிமைகளை மீட்பதற்குமான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று காணொலி வாயிலாகக் கோரிக்கை வைத்தேன். ஒரே இலக்கு – தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்பதை நீங்கள் ஏற்று, மார்ச் 1- ம் நாள் என்னுடைய பிறந்தநாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி அமைப்புகளிலும் அந்த உறுதிமொழியை ஏற்று, பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்திய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நானும் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுதான், தொண்டர்களின் கடலாக மாறிய அண்ணா அறிவாலயத்தில் ஏறத்தாழ 6 மணி நேரத்திற்கும் மேலாக நின்று தொண்டர்களின் அன்பான வாழ்த்துகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.

தமிழிசையின் வாழ்த்து

கட்சித் தலைவர் என்ற பொறுப்பினை உடன்பிறப்புகளான நீங்கள் என் தோளில் சுமத்தியதால், தமிழ்நாட்டு மக்கள் முழுநம்பிக்கை வைத்து ஜனநாயக முறைப்படி முதலமைச்சர் என்ற பொறுப்பை வழங்கினார்கள். அதனால் என் பிறந்தநாளில் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அன்பான வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தனர். அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

பாஜக நிர்வாகியான தமிழிசை சௌந்திரராஜன் எனக்கு ‘மும்மொழி’யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்தநாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், அவர் மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய ‘பண்பையும்’ காட்டியிருக்கிறார். தமிழிசையின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘இந்தி’ இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.

தமிழ் – ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். உங்களில் ஒருவனான எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்துகொள்ளவில்லை.

தமிழிசை தெலுங்கு எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசியமில்லை என்கிற அளவிற்கு அவருடைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், அவர் நம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் மகள் அல்லவா!

தொழில்நுட்ப வளர்ச்சி

Google Translate, Chat GPT, Artificial Intelligence போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. அச்சிடப்பட்ட காகிதத்தைப் படம் எடுத்து, அதை இன்றுள்ள தொழில்நுட்பத்தில் எழுத்துருக்களாக மாற்றி, நாம் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகிவிட்டன.

ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். கல்வியாளர்கள், மொழி அறிஞர்கள், குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பார்வை கொண்ட பலரும் இதைத்தான் தெரிவிக்கின்றனர்.

அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பாஜக-வும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள். என் பிறந்தநாளில் தெலுங்கிலும் வாழ்த்துச் சொன்ன தமிழிசை அதனைத் தன் விருப்பத்தின் அடிப்படையில் செய்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ள அவரைப் பாராட்டுவதுடன், மும்மொழி என்ன இன்னும் எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.

ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம். மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் ஏதேனும் மூன்று மொழி என்பதல்ல. சிறுபான்மை சமுதாய மக்களுக்கான உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துக் கூடியதல்ல. ஆனால், பாஜகவின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.

மொழித்திணிப்பு

திமுக-வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும்சாராதவர்களும் பள்ளிக்கூடங்களை நடத்த முடியும். திமுகவினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துகிறவர்களும், மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துகிறவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள்.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக்கொள்கைதானே தவிர, திமுகவினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை.

இது தெரிந்திருந்தும் அரசியல் நோக்கத்துடன் பேசும் பாஜக நிர்வாகிகள், “தனியார் பள்ளியில் படிக்கும் பணக்கார குடும்பத்து மாணவர்களுக்கு கிடைக்கும் இந்தி படிக்கும் வாய்ப்பு, ஏழை மாணவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?” என்று ஏதோ தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் மீது இவர்களுக்கு மட்டும்தான் அக்கறை உள்ளது போல பேசுகிறார்கள். பாஜக ஆட்சி செய்கின்ற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைவிட, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லாத-இருமொழிக் கொள்கை வழியிலான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.

மாணவ சமுதாயத்தினருக்குத் தேவையான நவீனக் கல்விக் கட்டமைப்புடன் தரமான வகுப்பறைகள் – பாடங்கள்- காலை சிற்றுண்டி – மதிய உணவு – விளையாட்டு மேம்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் தமிழ்நாட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதை பிற மாநில கல்வித்துறையினரும் பார்வையிட்டு பாராட்டிச் செல்கிறார்கள்.

மாணவர்களின் மீது மொழித் திணிப்பு எனும் சுமையை ஏற்றாமல், திறன் மேம்பாடு என்கிற வாய்ப்பை வழங்குவதுதான் திமுக அரசின் கல்வித் திட்டம். இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ளவர்கள் இந்தி மொழியைக் கற்பதும், வட மாநிலத்தவர்கள் தென்னிந்திய மொழிகளில் ஒன்றைக் கற்பதும் தேச ஒற்றுமைக்கு வழிவகுக்குமென காந்தியடிகள் நம்பினார். அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் உருவானதுதான் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா.

சென்னையில் உள்ள அதன் தலைமை நிலையத்திற்கு காந்தியடிகளே நேரில் வந்து நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். தற்போது 6000 மையங்களுடன் தென்மாநிலங்கள் முழுவதும் இந்தி பிரச்சார சபா இயங்கி வருகிறது. தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வடஇந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?

வள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவுவதாக சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள்? கோட்சே வழியைப் பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒரு போதும் நிறைவேற்ற மாட்டார்கள். சென்னை மாகாணம் என்ற பெயர் இருந்த காலத்திலேயே ‘தமிழ்நாடு காங்கிரஸ்’ என்று பெயர் வைக்கச் செய்தவர் காந்தியடிகள்.

தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரயில்களுக்கு கூட இந்தி-சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் மத்திய பாஜக ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்” என்று தெரிவித்துள்ளார்.