• Mon. Dec 9th, 2024

மிதிலி புயல் எதிரொலி.., துறைமுகங்களில் புயல்கூண்டு எச்சரிக்கை..!

Byவிஷா

Nov 17, 2023

மதிலி புயல் எதிரொலியால் சென்னை துறைமுகம் முதல் தூத்துக்குடி வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது புயலாக இன்று காலை வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மிதிலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலானது தற்போது 190 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த மிதிலி புயலானது வங்கதேசம் ஒட்டிய கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிப்பிடும் வகையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. தற்போது புயல் உருவாகிவிட்ட காரணத்தால், 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகியுள்ளதால், காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. புயலின் தாக்கத்தை கொண்டு மொத்தம் 11ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வரை ஏற்றப்படும். மிதிலி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.