பொதுமக்கள் தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டும் என்று மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்டு அண்ணல் காந்தியடிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர்
அண்ணல் காந்தியடிகளின் 153 -வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்றும் கூறினார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காந்தியடிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை கெளரவ படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் செய்தித்துறை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியடிகள் தமிழக மக்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்று கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு விதிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .
இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.