நாடார் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கங்காராம் துரைராஜ் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் இராஜேந்திரன் வரவேற்புரையாற்றிட, கல்லூரியின் செயலாளர்& தாளாளர் சுந்தர் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கலந்துகொண்டு, “கல்வி மற்றும் தொழில் மூலம் மாணவர்கள் முன்னேற்றமடைய இச்சமூகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தம் சொந்த உழைப்பின் மூலம் உலக அளவில் முன்னேற்றமடைய வேண்டும். இக்கல்வி நிறுவனமானது கிராமப்புற மாணவர்கள் கல்வி பெற ஊக்குவித்து மேம்படுத்துவதென்பது பாராட்டுதலுக்குரியது என்றும், கடந்த ஆண்டுகளில் டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்புக்களை வழங்கியும், விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கேற்கச்செய்ய ஊக்குவித்து வருவருதென்பது பெருமைக்குரியது என்றும் கூறினார். மாணவர்கள் பட்டம் பெறுவது மட்டும் நிலையான ஆரம்பமோ முடிவோ அல்ல. ஒவ்வொரு மாணவனும் தம் சமுதாயத்தில் தோல்வியைக் கண்டு சோர்ந்து விடாது சமாளித்து வாழ்வில் புதிய தனித்திறமைகளை வளர்த்து மேம்பட வேண்டும். இதில், ஆசிரியர்களின் தியாகமும் பணியும் சிறப்புக்குரியதாக உள்ளது. மாணவர்கள் நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல உறுதிகொள்ள வேண்டும்” என்றும் கூறி பட்டம் பெற வந்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில், மாணவர்கள் 543, மாணவிகள் 362 என மொத்தம் 905 பட்டதாரிகளுக்குப் பட்டம் வழங்கினார்.
முன்னதாக, கல்லூரியில் நவீனமயமாக்கப்பட்ட கணினி அறிவியல் துறை ஆய்வகத்தை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நவீனமயமாக்கப்பட்ட வேதியியல் துறை ஆய்வகத்தை திண்டுக்கல், சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முருகேசன், நிர்வாகிகள் அறையை விருதுநகர், இதயம் குழுமத்தின் சேர்மன் ‘இதயம்’ முத்து, முதல்வர் அறையை விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியின் புரவலர் குறள் அரசன் மற்றும் செந்தில்குமார் நாடார் விடுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமையற் கூடத்தை பெங்களுர், ரமேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட்.-ன் சேர்மன் ரமேஷ்ராஜா திறந்து வைத்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் துணைத்தலைவர் பொன்னுச்சாமி, பொருளாளர் நல்லதம்பி, நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், துணை முதல்வர் முனைவர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாதவன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.