• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீர் தேக்க தொட்டிகளை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்..,

Byமுகமதி

Dec 23, 2025

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் பெற்ற மனுக்களின் அடிப்படையிலும் மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

ஆலங்குடியை அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்தது. அதனை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.

அதேபோல் பொற்பனைக்கோட்டை கோவில் இருக்கும் பகுதியான வேப்பங்குடி ஊராட்சி இம்மனாம்பட்டி பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூபாய் 30 லட்சம் செலவிலும் கீழ வேப்பங்குடி பகுதியில் ரூபாய் 19 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியும் வம்பன் காலனி மாரியம்மன் கோவில் பகுதி அருகில் அதே 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 19 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு அனைத்தையும் ஒரே நாளில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருவரங்குளம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி திமுக திருவரங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அரு.வடிவேல் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். கட்டி முடிக்கப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் இன்னும் என்னென்னவெல்லாம் குறை வேலைகள் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன் திருவரங்குளம் ஒன்றிய அலுவலக பொறியாளரான யோக நாதனை அழைத்து என்னென்ன வேலை எல்லாம் இன்னும் செய்ய வேண்டி இருக்கிறது. இப்போது திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டாலும் கூட இதில் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன அவற்றை உடனடியாக செய்து முடித்தாக வேண்டும் என்று அவருக்கு வாய்மொழி உத்தரவிட்டார்.

அதனை ஏற்றுக் கொண்ட பொறியாளர் யோகநாதன் ஒரு சில நாட்களுக்குள் அவற்றை முடித்து விடுவதாகவும் அமைச்சரை சமாதானப்படுத்தினார். அதேபோல் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண்களில் பலரும் தங்களுக்கு வந்து சேர வேண்டிய 100 நாள் வேலை திட்டப் பணியில் உரிய ஊதியம் வந்து கிடைக்கவில்லை என்றும் அதைப் பெற்றுத் தரும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதை செவிமெடுத்து கேட்டுக் கொண்ட அமைச்சர் உடனடியாக ஓவர்சியர் நிலையில் உள்ள அதிகாரியை அழைத்து விசாரித்த போது ஒன்றிய அரசிடமிருந்து போதிய அளவு நிதி வரவில்லை என்றும் அது வந்தவுடன் விரைவில் அனைவருடைய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதை அறிந்த மக்கள் சமாதானம் ஆகினர். அந்தந்த கிராம பெண்களிடம் மகளிர் உரிமைத்தொகை வந்துவிட்டதா என்றும் கேட்டறிந்து குறிப்பெடுத்துக் கொண்டார்.