• Sun. Apr 28th, 2024

மிக்ஜாம் புயல் : வேளச்சேரியில் மண்ணுக்குள் இறங்கிய அடுக்குமாடி கட்டிடம்..!

Byவிஷா

Dec 4, 2023

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று மண்ணுக்குள் இறங்கி உள்ளது. இந்த கட்டிடத்திற்குள் கேஸ் நிலைய ஊழியர்கள் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் நேற்று உருவானது. புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் இரவில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.
குறிப்பாக சென்னை வேளச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி 5 பர்லாங்க் ரோட்டில் கியாஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. ஊழியர்கள் தங்கும் வகையில் இந்த கட்டடம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் கனமழை தொடர்ந்து பெய்த நிலையில் திடீரென்று அந்த கட்டடம் தரையில் இறங்கியது. இதனால் கட்டடம் மண்ணுக்குள் சென்றது. இந்த கட்டத்தில் கியாஸ் நிலைய ஊழியர்கள் இரவு பணியை முடித்து தங்கியிருந்தனர். முதலில் 10 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் 3 ஊழியர்கள் மட்டுமே அந்த கட்டத்துக்குள் சிக்கினர். இதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், கிண்டி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கட்டடம் மண்ணில் புதைந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *