• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு..,

BySeenu

Jul 27, 2026

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய தொழில் மற்றும் கல்வி நகரங்களில் ஒன்றான கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி வழங்க மறுத்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், கோவை பந்தயசாலை பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கோவைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஈஸ்வரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக பந்தயசாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில், வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தாமதப்படுத்தக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.