• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காதலர் தினத்தில் அதிகமாக பரிசுகளை வாங்கிய ஆண்கள்..!

Byவிஷா

Feb 14, 2023

காதலர் தினமான இன்று பெண்களை விட ஆண்களே அதிகம் பரிசுகளை வாங்கி இருப்பதாக சர்வே ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது குறித்து முன்னணி கிப்ட் நிறுவனமான ஐஜிபி சர்வே ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்துக்கு முந்தைய தினமான நேற்று இரவு வரை, பெண்களை விட அதிகளவிலான ஆண்களே பரிசு பொருட்களை வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பரிசுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் சராசரி ஆர்டர் மதிப்பும் 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் அந்த சர்வே ரிப்போர்ட் கூறுகிறது. இந்த அறிக்கையின்படி, காதலர் தினத்துக்கு 5 லட்சம் மலர் தண்டுகள் விற்பனையாகியுள்ளன. இதில் 70சதவீதம் ரோஜா பூ மலர் தண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், பூக்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் மற்றும் டெடி பியர்களையே வாடிக்கையாளர்கள் அதிகம் பிரியப்பட்டு வாங்கி பரிசாக அளிப்பதாகவும் ஐஜிபி சர்வே ரிப்போர்ட் கூறுகிறது. சாக்லேட், டெடி பியர் எல்லாம் காலம் காலமாக காதலர்களின் பரிசு பட்டியலில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. காம்பினேஷன் என வந்துவிட்டால் மலர் மற்றும் சாக்லேட்டை 40சதவீதம் பேரும், டெடி பியருடன் பரிசுப் பொருட்களை 30சதவீதம் பேரும், இதர காம்போக்களை 30சதவீதம் பேரும் வாங்கி பரிசாக அளித்துள்ளனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு பரிசு பொருட்களை வாங்குவதற்காக சுமார் 50 லட்சம் பேர் ஐஜிபி இணையதளத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காதலர் தினம் பாரம்பரியமாக கொண்டாடப்படவில்லை என்றாலும், கடந்த பல ஆண்டுகளில் நல்ல வரவேற்பை பெற்று, பரிசு தொழில்துறை பல மில்லியன் டாலர் மதிப்புள்ளதாக வளர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் பரிசுகளை வாங்குவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. சிறு நகரங்களும் போட்டி போட்டு இத்துறையில் வளர்ந்து வருகிறது. இதற்கேற்ப வகை வகையான புதிய பரிசு பொருட்களும் மார்க்கெட்டில் குவிந்து வருகின்றன.