ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, போட்டியிடுவதற்கு பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று விருதுநகரில், பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டியின் போது கூறினார்.
விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவல்பட்டி பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 7 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்.பி. மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து மாணிக்கம் தாகூர் கூறும்போது, ஒன்றிய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் பொதுமக்களுக்கு, நடுத்தர மற்றும் ஏழைஎளிய மக்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட்டாகவும்,
அதானி என்ற தனி மனிதருக்கு உதவி செய்யும் பட்ஜெட்டாகவும் தான் இதனை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்திருக்கிறார். மேலும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை குறைத்திருக்கிறார். இதனால் 100 நாள் வேலை வாய்ப்பை நம்பி பயன்பெற்று வந்த ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழைகளின் வலியை பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பவர்களின் பட்ஜெட்டாக இருக்கின்றது. கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் அதானி என்பவருக்காக மட்டுமே செயல்பட்டு உலக பணக்காரர்கள் வரிசையில் 609வது இடத்திலிருந்த அதானியை, உலகின் இரண்டாவது பணக்காரராக உருவாக்கியது மட்டுமே பிரதமர் மோடி செய்த சாதனையாகும்.
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை பாஜகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் ராகுல்காந்தியை உள்ளத்திலிருந்தும், உணர்வுகளை தூண்டியும் பிரதமர் மோடி எதிர்க்கிறார்
. இன்று பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று பெருமை பேசி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டது. அதனை பிரதமரும், நிதி அமைச்சரும் மறைத்துக்கூறி வருகின்றனர். வளர்ந்த நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியாவில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயராமல் இருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளை மோடி அரசு செய்யத்தவறி விட்டது. ஏழை, எளிய மக்களின் சட்டபூர்வ உரிமைகளைக்கூட மோடி அரசு தர மறுக்கின்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதற்கு பயந்து கொண்டு, இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார் அவருக்கு வாழ்த்துகள். திமுக கூட்டணியை பார்த்து பாஜக மிரட்சியடைந்துள்ளது. அதிமுக கட்சியை சசிகலா அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என்று நான்கு கூறுகளாக்கிய பங்கு பாஜகவைத் தான் சேரும். பிளவுபட்ட அதிமுக கட்சியை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்ப்பது தான் அவர்களின் எண்ணம். அது ஒரு போதும் நடைபெறாது. ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி படு தோல்வியை சந்திக்கும் என்று கூறினார்.