புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் வழக்கறிஞர் கே இந்த வேலையா என்று பரபரப்பாக பேசப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்த போதிலும் போதிய சாட்சியங்கள் இல்லை என்று வழக்கு சில ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் அந்த கொலைச் சம்பவம் பற்றி புதுக்கோட்டையில் எப்போதும் பரபரப்பு இருந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான் அவரது நினைவு நாளை (பிப்ரவரி 11) ஆண்டுதோறும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் கே கே செல்வகுமார் தனது தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து இங்கு வழக்கறிஞர் கண்ணனின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதேபோல் நினேவேந்தலின் நிறைவில் மேடை போட்டு ஒலிபெருக்கி வைத்து நினைவேந்தல் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் பேசி விட்டு செல்வார்.
இந்த நிலையில் தான் 13 வது ஆண்டான இந்த ஆண்டு நிகழ்வாக காலையிலேயே தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனரும் வீர முத்தரையர் சங்கத்தின் தலைவருமான கருப்பையா தனது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தி வீர முழக்கமிட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து முத்தரையர் சிங்கப்படை நிறுவனர் திருக்கட்டளை பாலகிருஷ்ணன் அம்பலகாரர் தலைமையில் இளைஞர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் கண்ணன் குறித்து அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் கூறுகையில் அவர் மிகவும் எளிய நிலையில் இருந்து கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய சூழலில் வளர்ந்து வழக்கறிஞர் ஆனதோடு மட்டுமல்லாது அவரைப் போல் பலரையும் கல்வியில் உயர்த்தி வந்தார்.

அது பொறுக்காமல் தான் இப்படி ஒரு கொலை சம்பவம் நடந்திருந்தது. அவர் எவ்வாறு மற்றவர்களுக்காக கல்வி வளர்ச்சியில் உதவி செய்தாரோ அந்த நினைவை போற்றும் வகையிலும் நாங்களும் மற்றவர்களது கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பாடுபட வேண்டியதன் அவசியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்காக தான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை இதுவரை நடத்தி வந்தோம் இனிமேலும் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.










