தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலையை வெல்ல தடுப்பூசி ஒன்றே முக்கிய ஆயுதம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த நிலையில், தற்போது மத்திய அரசிடம் இருந்து கணிசமான தடுப்பூசியை தமிழக அரசு வாங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்துகிறது.
தமிழகத்தில் 43,051 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரை சுமார் 3.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ளவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் இன்று இந்த மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம் மூலமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.