• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெகு விமர்சையாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண வைபோகம்…

Byகாயத்ரி

Apr 14, 2022

சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மேல ஆடி மற்றும் வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருப்புகழ் மண்டபத்தின் அருகில் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்க திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்ரமணிய சுவாமியும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6 மணியளவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். அதிகாலை 4 மணிக்கு அம்மனும் சுவாமியும் அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகளையும் வலம் வந்த பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடிய பிறகு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

இந்நிகழ்ச்சியில் குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் செந்தில் பட்டர் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் ஹாலாஸ்ய நாதர் பட்டர் மீனாட்சியாகவும் வேடமேற்று மாலை மாற்றித் திருக்கல்யாண காட்சியை நிகழ்த்தினர். பிறகு மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பெற்றது. பிரியாவிடை அம்மனுக்குப் பொட்டும், மாங்கல்யமும் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து திருமணச் சடங்குகள் நடைபெற்றன. திருக்கல்யாண நிகழ்வின்போது அரங்கில் குழுமியிருந்த பெண்கள் புதிய திருமாங்கல்யம் அணிந்து கொண்டனர்.இத்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள், மணமக்களான மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்குத் திருமாங்கல்யம் பட்டுத்துணிகள், பணம் முதலியவற்றை மொய்யாகச் செய்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் குண்டோதரனுக்கு அன்னமிடல் எனும் திருவிளையாடற் புராண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க வந்த பொதுமக்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக 2 ஆயிரம் போலீசார் மதுரை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளிக்க கோவிலின் முன்பாக 20 இடங்களில் பெரிய எல்சிடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.