ஆண்டிபட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலில் நேற்று மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு தாலி மாற்றிக் கொண்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பாக உற்சவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முத்தாய்ப்பாக நேற்று நடந்த மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகல்யாணத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
இவ்விழாவில் சுந்தரேஷ்வரர் வெண்பட்டு உடுத்தியும், தாயார் மீனாட்சி பச்சை பட்டு உடுத்தியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்து சமய ஆகம விதிகளின்படி வேத மந்திரங்கள் ஓத, கெட்டி மேளம் முழங்க சுந்தரேஷ்வரர் , தாயார் மீனாட்சிக்கு மாங்கல்யம் அணிவித்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை பயபக்தியுடன் கண்டு களித்தனர். சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொண்டனர்.
பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் , விபூதி, சர்க்கரை, கல்கண்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இத்திருக்கல்யாணத்தை முன்னிட்டு கல்யாண விருந்து அளிக்கப்பட்டு , மொய் எழுதப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் விழாக்கமிட்டியார் செய்திருந்தனர்.