• Fri. Apr 19th, 2024

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 5-வது மாத விழா..!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 5-வது மாத விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அருளாசி கூறினார்.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டு நிகழாண்டு ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் பவள ஆண்டின் 5-வது மாத விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை ஏற்று அருளாசி கூறி பேசியதாவது..,
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதில் முக்கியமானது ஒழுக்கம். கல்வி கண் போன்றது என்பர்.

ஆனால், கண்ணை இழந்தவர்கள் கூட அதனை மீண்டும் பெற வாய்ப்புள்ளது. ஆனால், உயிர் போனால் மீண்டும் வராது. அதனால்தான் வள்ளுவர் ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார். அதேபோல், மனிதனுக்கு மிகவும் அவசியமானது நட்பு. அதனால்தான் வள்ளுவர் நட்புக்கு முக்கியத்துவம் அளித்து தனது 4 அதிகாரங்களில் நட்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பார்கள். கொடைக்கு மிகவும் பிரசித்தி பெற்றவன் கர்ணன். ஆனால், அருளாளர்கள் கொடையைப் பற்றி பேசும்போது கர்ணனைக் குறிப்பிடாமல், பாரியைப் பற்றி பேசியுள்ளனர். இதற்கு காரணம் ‘கர்ணன் துரியோதனனிடம் கொண்டிருந்த கூடா நட்பே காரணம்’ ஆகும். எனவே, தனது நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம், பாரதிதாசன் பல்லைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் பங்கேற்று, கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினர். இதில், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *