ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், மூக்கையூர், கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் வாலிநோக்கம் கடற்கரையில் உருளை வடிவில் ராட்சத பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கடலாடி வட்டாட்சியர் மற்றும் மரைன் போலீசார் கரையொதுங்கிய உருளை வடிவான பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை ஈடுபட்டனர். பின்னர் அது கப்பல்கள் கடலில் செல்லும்போது வழிகாட்டும் பயோ ராட்சத மிதவை என மரைன் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பயோ மிதவைகள் மீன்பிடி துறைமுகங்களில் அதிக அளவில் கடல் நடுவே போடப்பட்டு இருக்கும் என்றும் , தற்போது கடல் சீற்றம் காரணமாக இந்த மிதவைகள் கரை ஒதுங்கி இருக்கலாம் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.