தேவகோட்டை அருகே கார்த்தி சிதம்பத்திற்கு எதிராக கோஷமிட்டதால் மாங்குடி எம்எல்ஏ ஆதாரவாளர்களுக்கும், உள்ளூர் காங்கிரஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிவகங்கை மக்களவைத் தொகுதி கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இன்று கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி பிரச்சாரம் செய்தார்.
சிறுவாச்சி சென்ற போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த காங்கிரஸார் தங்களுக்கு தகவல் சொல்லாமல் எப்படி, பிரச்சாரத்துக்கு வரலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே சமயத்தில் சிறுவாச்சி , புத்தூரணி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பேசுகையில்.., ” நாங்கள் கார்த்தி சிதம்பத்துக்கு தான் வாக்களித்தோம். ஆனால் 5 ஆண்டுகளாக நன்றி கூற வரவில்லை. எங்கள் பகுதிக்கு வந்த பேருந்தை நிறுத்திவிட்டனர். சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை” என்று கூறி பிரச்சனை செய்தனர்.
அவர்களை மாங்குடி சமரசம் செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளூர் காங்கிரஸார் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவர்களுக்கும், எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அங்கிருந்த போலீஸார் அவர்களை சமரசப்படுத்தினர். பின்னர் மாங்குடி எம்எல்ஏ பிரச்சாரம் செய்யாமல் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..