• Thu. May 2nd, 2024

ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி கட்சியின் தொண்டர்கள் பலர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் துவங்கிய பிரச்சார பயணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெலார்மின், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே டி உதயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, ஆம் ஆத்மி மாவட்ட தலைவர் ஷெல்லி, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தின் போது வாக்குசேகரித்து பேசிய வெற்றி வேட்பாளர் விஜய்வசந்த்..,

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் இந்தியாவில் தற்போது துவங்கியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த நம் தேசத்தின் மக்களை மீட்டெடுப்பதற்காக மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நமது மக்கள் அடிமை ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றனர்.

தற்போது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களை பிரித்து அவர் வாழ்வாதாரங்களை நசுக்கி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு துணை நிற்பதற்காக மக்களை பிரித்தால முயற்சி செய்கின்ற வேலையில் மத்திய பா ஜ க அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த அவல ஆட்சியில் இருந்து மக்களை மிட்க நமது இளம் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் துவங்கியுள்ளது. இதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மூலம் தன் பாதங்களால் நடந்தே சென்று விவசாயிகள், தொழிலாளர்கள், பாழங்குடியின மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து ஆரத்தழுவி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம் எனும் அன்புத்தலைவர் ராகுல் காந்தியின் வார்த்தைகளுக்கு ஏற்ப வெறுப்புகள் நீங்கி அன்பால் அனைவரும் ஒன்றிணைத்திட ஒரு நல்லாட்சி மத்தியில் அமைந்திட வேண்டும். அதற்கு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திட வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து ஒற்றுமையுடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ நீங்கள் அனைவரும் இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்குவதற்காக காங்கிரஸ் பேரியக்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய். படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை, அனைத்து மாணவர்களின் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும். சமையல் எரிவாயு விலை 500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்பது போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவேன். இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திட தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன்.

நீண்ட நாட்களாக நமது மாவட்டத்தில் விமான நிலையம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றேன். விரைவில் நமது மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்பேன்.

இன்றைக்கு பாஜகவினர் தோல்வி பயத்தால் சட்டத்திற்கு புறமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாம் தேதி முதல் தபால் வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகின்றது. 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்.

தபால் வாக்குகளை பெறுவதற்காக செல்லும் தேர்தல் அதிகாரிகள் சிலர் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்துகின்றனர்.

பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தோல்வி பயத்தால் தற்பொழுது இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பா ஜ க வின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வசந்த் கூடி நின்ற மக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *