• Tue. May 7th, 2024

இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை..!

Byவிஷா

Nov 2, 2023

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை என்று ஒரு சிறிய மலைவாழ் கிராமம் உள்ளது.
இந்த மாஞ்சோலையானது பசுமையும், இயற்கையின் அழகும் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மற்ற மலை சுற்றுலா தலங்களைப்போன்று அல்லாமல் சற்று மாறுபட்டது. இந்த மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, நாலுமுக்கு, அப்பர் அணை உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை சுற்றுலா தளங்களை போல இங்கே யாரும் அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது. இங்கே கட்டுப்பாடுகள் அதிகம்.
பசுமையும் அழகும் நிறைந்த இந்த மாஞ்சோலை பேரழகு கொண்ட பகுதியாகும். இந்த மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டும் அன்றி இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கே தனி வாகனத்தில் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், அம்பாசமுத்திரத்தில் இருக்கும் வனத்துறையின் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு ஆதார் உள்ளிட்ட ஐடி கார்டுடன் சென்று, அங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனை நீங்கள் டூர் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே செய்து கொள்ளுங்கள்
அந்த விண்ணப்பத்தில், மாஞ்சோலைக்கு செல்ல இருப்போரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், வண்டி எண் போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். வனத்துறையினர் அனுமதி கொடுத்த பிறகு, அந்த அனுமதி சீட்டை மூன்று அல்லது நான்கு ஜெராக்ஸ் காபிகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாஞ்சோலை செல்லும் வழியில் இருக்கும் செக்போஸ்டில் காண்பிக்க வேண்டி இருக்கும். இந்த வழிமுறையானது மாஞ்சோலையில் தங்காமல் மாலையில் கீழே வரும் வகையில், ஒருநாள் டூருக்கு திட்டமிடுபவர்களுக்கானது.
அதே சமயம் நீங்கள் மாஞ்சோலையில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இரவில் தங்கி சுற்றிப் பார்க்க விரும்பினால், அதற்கான விதிமுறைகள் வேறு. அவ்வாறு செல்ல விரும்புபவர்கள் https://kmtr.co.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில், பெயர், வண்டி எண், எத்தனை நாட்கள் தங்கவுள்ளீர்கள் என்பது உள்ளிட்ட தேவையான விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் மாஞ்சோலை அருகில் உள்ள ஊத்து நாலுமுக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்தது. இதனால் கடந்த அக்டோபர் 19-ம் தேதி முதல் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது. இதையடுத்து வனத்துறையினரின் தீவிர முயற்சிக்குப் பிறகு அரிசி கொம்பன் யானை அடர் வனத்திற்குள் விரட்டி அடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் அரிசி கொம்பன் யானையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாது. யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை வனத்துறை உறுதி செய்தது. இதனால் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *