• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கத்தியை காட்டி ஓட்டு சேகரிப்பு!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்துக் கட்சி பிரமுகர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல பகுதிகளில் சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடும் தனது மனைவிக்காக கணவர் கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். இவர், காங்கிரஸ் கட்சியில் ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி, எஸ்.டி. அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இவர் வசிக்கும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனக்கு பதிலாக ஏற்கனவே வார்டு கவுன்சிலராக இருந்த தன்னுடைய மனைவி தனலட்சுமியை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். தனலட்சுமிக்கும், திமுக வேட்பாளரான லில்லி மாணிக்கத்துக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ள தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பூபாலன் தன் மனைவிக்காக ராமாபுரம் பகுதியில் பொதுமக்களை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி ஓட்டு கேட்பதை பார்த்தனர். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.