• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக 22 பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்தவர் போலி நியமன ஆணை வழங்க வந்த போது சிக்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அஞ்சல் ரெட்டிகுப்பம் கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் என்பவரின் மகன் ஏழுமலை பெஞ்சமின் (வயது 51). ரியல் எஸ்டேட் செய்து வந்த இவர், தனது தொழில் பழக்கத்தின் அடிப்படையில் தான் கல்வி துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் தனக்கு அரசு உயரதிகாரிகள் தெரியும் என்றும் அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் பலரை நம்ப வைத்துள்ளார்.

இதுபற்றி தொழில் ரீதியாக பழகி வந்த ராமநாதபுரம் காளிகாதேவி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் ராஜா என்பவர் தனது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். ரூ.40 லட்சம் இதற்காக பணம் பெற்றுக் கொண்ட ஏழுமலை பெஞ்சமின், மேலும் பலரை பணம் கொடுக்க வைத்தால் அரசு வேலை பெற்றுத் தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஏராளமானோர் அரசு வேலை வாங்கித் தருவதற்காக பணம் செலுத்தி உள்ளனர்.
அவர்களிடம் ஏழுமலை பெஞ்சமின் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், டிரைவர், பேரூராட்சி செயல் அலுவலர் வரையிலான பதவிகள் பெற்றுத் தருவதாக கூறி 22 பேரிடம் ரூ.40 லட்சம் வரை பணம் பெற்று இருந்தாராம். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட ஏழுமலை பெஞ்சமினிடம் பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து கேட்டபோது சிலருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி உள்ளார்.

இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நபர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பணியில் சேர வந்த போது அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இந்நிலையில் மீதமுள்ள நபர்களும் நெருக்கடி கொடுத்ததால் நேற்று முன்தினம் காலை கலெக்டர் அலுவலகத்தில் பணி நியமன ஆணையை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதன்படி அவர் நேற்று முன்தினம் காலை கலெக்டர் அலுவலகத்திற்கு போலி பணி நியமன ஆணைகளுடன் வந்தபோது ஏமாந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இது தொடர்பாக அனைவரும் சேர்ந்து கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்த ஏழுமலை பெஞ்சமினை பிடித்து விசாரித்து வருகின்றனர்.