ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்த நிலைக்கு போய்விட்டோமே என்று மூலையில் முடங்கி விட்டால் முடங்கியதுதான். நன்றாக மீண்டும் எழுந்திருப்போம் என்று நினைத்தால் மட்டுமே வெற்றி. இவைதான் மூலதனமே! “நன்றாக எழுந்திருப்போம், தோல்வியை படிக்கட்டாக எடுத்துக்கொண்டு எழுந்து நடந்து நிமிர்ந்த பெண்மணிதான் மாளவிகா”! தான் என்கிறார்கள். யார்? இந்த மாளவிகா..,
இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா. இந்தியாவிலேயே மிக அதிகமான காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர்.
‘கஃபே காபி டே’ (Cafe Coffee Day)யின் உரிமையாளர்.
13,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள்.
நாடெங்கும் 1,600 காபி டே கடைகள்.
நேர்மையும் பண்பும் நிறைந்தவர். பாரம்பரிய செல்வந்தர் குடும்பத்தின் வாரிசு.
இன்னுமொரு செல்வ குடும்பத்திலிருந்து வந்த அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக இரண்டு அருமையான குழந்தைகள்.
2019 ஜூலையில் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார்.
“நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை முடக்கி விட்டது. வங்கி கடன் கணக்குகள், நிறுவன பரிவர்த்தனைகள் அனைத்தும் முடங்கிவிட்டன. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்” என்று விரக்தியுடன் தற்கொலைக் கடிதத்தில் கூறியிருந்தார் சித்தார்த்தா.
இந்த மரண சாஸனம் மத்திய அரசின் மனசாட்சியை உலுக்கியது. அந்த வாரமே வருமான வரி துறையில் பல மாற்றங்களை அறிவித்தார், நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்.
அந்த சம்பவத்தில் அனைவரையும் கலங்கவைத்தது தனது கணவரின் முகத்தை பார்க்கக் கூட மன உறுதியில்லாமல் கதறி தவித்த அவரது மனைவி மாளவிகாவின் துயரம்.
மாளவிகா ஹெக்டே யார் என்பது அந்த சம்பவத்துக்கு முன்னர் சிலருக்கே தெரிந்திருக்கும்.
மாளவிகா, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செல்ல மகள்.
மாளவிகாவுக்கு கணவன் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டுமல்ல, பாக்கி வைத்த கடனும் மிக அதிகம். சுமார் 7,000 கோடிகள்.
மாளவிகாவை சுற்றி வளைத்த கஷ்டங்கள் இரும்பு மனிதர்களையும் துவண்டு விடச்செய்யும்.
ஒருபுறம் கணவரின் எதிர்பாராத மரணம். மறுபுறம் ரூ. ரூ.7,000 கோடி கடனில் சிக்கி மூழ்கிவரும் கணவரின் கனவு நிறுவனம்..
நிறுவனத்தில் பின்னி பிணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம்.
கடனை திருப்ப செலுத்த நெருக்கும் வங்கிகள், கடன்காரர்கள்.
இது எதுவும் புரியாத வயதில் இரண்டு பிள்ளைகள்.
கோடிகளில் நாட்டையும் வங்கிகளையும் ஏய்த்து விட்டு வெளிநாடு தப்பி சென்று விட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்று மாளவிகாவும் எளிதில் வெளியேறியிருக்கமுடியும்.
ஆனால் மாளவிகா ஒரு கடினமான முடிவை எடுத்தார்.
மனத்தை தேற்றிக்கொண்டு ‘காபி டே’ நிறுவனத்தின் தலைமை அலுவலக படிகளில் ஏறினார். அதன் நிர்வாக பணிகள் அனைத்தையும் கற்று தேர்ந்தார்.
2020ல் அதை வழிநடத்தும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். சித்தார்த் விட்டு சென்ற அதே CEO நாற்காலியில் அமர்ந்தார்.
முதலில் 10 கோடி, 20 கோடி என்று சிறு, சிறு கடன்களை அடைத்தார்.
பெரிய கடன்களை தள்ளி செலுத்த வங்கிகளிடம் அவகாசம் கேட்டு பெற்றார்.
இலாபம் தராத இடங்களில் ‘காபி டே’ கிளைகள் மூடப்பட்டன. முக்கிய வணிக வளாகங்களில் புதிய கிளைகள் திறக்கப்பட்டன.
தொழிலாளர்களோடு நல்லுறவில் இருந்தார். அவர்களும் தோள் கொடுக்க தயங்காமல் நின்றனர்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான வலியை ஏற்றுக்கொண்டார். குடும்ப சொத்துக்கள், நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டன.
அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, ஒரே ஆண்டில் நிறுவனத்தின் கடன் பாதியாகக் குறைந்தது.
மார்ச் 2019 இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் கடன் ரூ. 7,200 கோடி. மார்ச் 2020 இறுதியில் அது ரூ. 3,100 கோடியாகக் குறைக்கப்பட்டது.
முதலீட்டாளர்களிடம் புதுநம்பிக்கை. ஊழியர்களிடம் முழு உற்சாகம்.
இன்று மீண்டும் தன்னை கட்டியெழுப்பி நிமிர்ந்து நிற்கிறது Cafe Coffee Day.
இந்த தருணத்தில் மாளவிகா ஹெக்டே எகனாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டி தன்னம்பிக்கைக்கு ஒரு பாடம். எவ்வளவு தெளிவு, தன்னம்பிக்கை, மனதில் எத்தனை விடாமுயற்சி என்று மலைக்க வைக்கிறது.
‘நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன், கணவரின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவேன்’ என்றும் அந்த பேட்டி முடிகிறது.
பெண்மையை தெய்வமாக வணக்கும் இந்திய மண்ணின் சக்தி என்ற சொல்லுக்கு முழுமையான அர்த்தம் மாளவிகா.
விதிக்கு அடிபணித்தார் சித்தார்த்.
விதியை எதிர்த்து நின்று போராடினார் மாளவிகா!