அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சையின் திருமணம், நேற்று பிரிட்டனில் எளிமையான முறையில் நடந்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பெண் குழந்தைகள் கல்விக்காக போராடிய மலாலா யூசப்சை, தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் பயங்கரவாதிகள், 2012ல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மலாலா படுகாயம்அடைந்தார். தலையில் குண்டு பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மலாலா, தீவிர கிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின், மலாலா தன் குடும்பத்துடன் பிரிட்டனின் பிர்மிங்காம் பகுதிக்குகுடிபெயர்ந்தார். இந்நிலையில், 2014ம் ஆண்டு, மலாலாவின் 17வது வயதில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறிய வயதில் நோபல் பரிசை வாங்கியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.பின், லண்டனில் படித்து வந்த மலாலா, கடந்த ஆண்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
இந்நிலையில், பிர்மிங்காம் வீட்டில் மலாலாவுக்கு திருமணம் நடந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரியான அசர் மாலிக் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை, மலாலா தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் கீழ் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள். வாழ்க்கை துணைகளாக இருக்க முடிவு செய்து, நானும் அசரும் திருமணம் செய்துஉள்ளோம்.