• Mon. Dec 2nd, 2024

அமைச்சர் நாசர் எச்சரிக்கை…

Byகாயத்ரி

Nov 11, 2021

தொடர் மழையை காரணமாக காட்டி கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றியத்தின் பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.


அதனைத் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். அதன்படி மழையின் காரணமாக பால் கொள்முதல் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.பால் கொள்முதல் வழித்தட வாகனங்கள் சங்கங்களில் பாலை எவ்வித தடையுமின்றி சேகரம் செய்வதையும் முறையாக இயங்குவதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பால் விநியோகம் செய்ய குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், மாவட்டங்களில் உள்ள பாலகங்கள் மற்றும் பால் விநியோக பகுதிகளில் தேவையான பாலை இருப்பில் வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் துணைப் பதிவாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ் ஆப் எண்ணினை பகிரப்பட வேண்டும்.


பால் இருப்பில் வைக்கப்பட்டுள்ள இடத்தின் விவரங்கள், பாலகங்களின் விவரங்கள் மற்றும் பாலானது நேரடியாக விநியோகம் செய்யப்படின் அதன் விவரங்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *