



மதுரையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆதரவற்றோர் முதியோர் மற்றும் வறியோரின் வயிற்று பசியை ஆற்றும் அரும் பணியை செய்து வருகிறது மதுரையின் அட்சய பாத்திரம்.
நாட்டில் கொரோனா பாதிப்பு வீரியமாகி மக்கள் பாதிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டில் இருந்து, இந்த சேவையை செய்து வருகிறது.


கடந்த பல ஆண்டுகளாகவே, பார்வைத்திறன் குறைபாடு உள்ள 250 மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கும் மாதம்தோறும் அரிசியும், ஆண்டுக்கு ஒரு முறை புத்தாடைகளும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சாலை ஓரத்தில் உள்ள பசியால் வாடுவோருக்கு உணவினை வழங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகர் நெல்லை பாலு.
இதற்காகவே ‘மதுரையின் அட்சயப் பாத்திரம்’ என்ற டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தினமும் உணவு தருவதோடு மட்டுமின்றி அமாவாசை பௌர்ணமி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு உணவினை கொடுத்து வருகிறார்.
நேற்று பங்குனி உத்திரம் பண்டிகை நாடு முழுவதும் பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விரதமிருந்து வரும் பக்தர்களின் பசியாற்ற மதுரை காந்தி மியூசியம் பூங்கா முருகன் கோயில் அருகில் பக்தர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம், காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ்முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் பூங்கா முருகன் கோவில் மேலாளர் குமரேசன் ஆகியோர் இணைந்து உணவுகளை வழங்கினர்.
மதுரை எஸ்.எஸ். காலனி பொன்மேனி நாராயணன் சாலையில், ‘அனுஷத்தின் அனுக்கிரகம்’ என்ற பெயரில் காஞ்சிப் பெரியவர் கோயிலையும் நெல்லை பாலு நிர்வாகித்து வருகிறார். அங்குள்ள சமையல் கூடத்திலேயே இதற்காக தினமும் காலையில் பிரத்தியேகமாக புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம் என ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமையல் செய்து மதுரையில் ஆதரவற்றோருக்கு வழங்கப் படுகிறது.
இவரது இந்த பணியினைப் பாராட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும் விருதுகள் வழங்கியும் கௌரவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

