• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கனமழையில் தத்தளித்த மதுரை: இரவு முழுவதும் தீவிர மீட்புப் பணியில் ஆணையாளரும் எம்.எல்.ஏ.வும்..,

ByKalamegam Viswanathan

Oct 23, 2026

மதுரை மாநகரில் கடந்த சில மணி நேரங்களாகப் பெய்த கனமழையால் பல்வேறு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளம் போல நீர் தேங்கியது. பொதுமக்களின் சிரமங்களை உடனடியாகக் களைவதற்காக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நள்ளிரவு என்றும் பாராமல் இரவோடு இரவாக நேரில் களமிறங்கி மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.

வெள்ளத்தில் மிதந்த நகரின் முக்கியப் பகுதிகள் மதுரை மாநகரின் இதயப் பகுதிகளான செல்லூர், கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆனையூர், மாட்டுத்தாவணி, கே.கே. நகர், பழங்காநத்தம் மற்றும் தெற்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாகச் செல்லூர் பகுதியிலுள்ள பிரசாத் சாலை மற்றும் 60 அடி சாலை போன்ற குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல், மதுரை ரயில்வே நிலையப் பகுதி மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்பாகத் தேங்கிய நீரால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரியார் பேருந்து நிலையம் முதல் பாண்டி பஜார் மற்றும் மீனாட்சி பஜார் வரையிலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. சின்ன சொக்கிகுளம், நரிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போக்குவரத்துத் தடை மற்றும் உடனடித் தீர்வுகள்
மழைநீர் தேக்கம் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நகரின் முக்கியத் தரைப்பாலங்களான தத்தனேரி, கார்ட்டர் தரைப்பாலம், பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து உடனடியாகத் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன. தேங்கிய நீர் உடனுக்குடன் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டது.
செல்லூர் பந்தல்குடி கால்வாய்ப் பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளால் நீர் வெளியேறும் பாதையில் ஏற்பட்ட அடைப்பு கண்டறியப்பட்டு, உடனடியாகச் சரிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீர் உறிஞ்சும் வாகனங்கள் (Suction Pumps) மூலமாகத் தேங்கிய மழைநீர் வேகமாக வெளியேற்றப்பட்டது.

களமிறங்கிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்
இரவு நேரப் பாதிப்புகளைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ்குமார் மற்றும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கல்லாணை ஆகியோர் நள்ளிரவு என்றும் பாராமல் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்கள் உடனடி ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கினர்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ்குமார் தெரிவித்த முக்கிய விவரங்கள்:

  • 16 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 32 சிறப்பு வாகனங்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
  • மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம்களும், அவசரத் தேவைகளுக்கான நிவாரண முகாம்களும் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • மதுரை ரயில்வே நிலையம் மற்றும் மாசி வீதிகளில் நிரந்தரமாக மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, ரூ.23 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.